அன்பே சிவம் ..
ஓம் நமசிவாய சிவாய நம..
ஓம்.
*நந்தி என்றால் ?
1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.
திருமூலரின் திருமந்திரம் பாடல் எண்.78
நந்தி யருளாலே நாதனாம் பேர் பெற்றே
நந்தி யருளாலே மூலனை நாடினே
நந்தி யருளாலே தென்செயு நாட்டினி
நந்தி வழிகாட்ட நானிருந்தேனே
விளக்கம்:- நந்தி என்ற பெயர் இனிவரும் பாடல்களிலும் நந்தியை முன்னிறுத்தி திருமூலர் நிறைய பாடல்கள் எழுதியுள்ளார். இந்த நந்தியின் வரலாறு என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
சிலாதனன் என்ற முனிவர் ஒரு குழந்தை வேண்டும் என்று பல வருடங்கள் தவமிருந்தால்
சிவபெருமான் அந்த முனிவருக்கு காட்சி தந்து என்னுடைய அம்சங்கள் அனைத்தும் கொண்ட ஒரு குழந்தை உனக்கு கிடைக்கும்
ஆனால் அந்தக் குழந்தை எட்டு ஆண்டுகள்தான் வாழும். எனக்கூறி மறைந்து விடுகிறார்.
அதன்படி ஒரு பேலையில் ஒரு குழந்தையைக் காண்கிறார். அது மிகவும் பிரகாசமாக சிரித்துக் கொண்டு இருக்கிறது. இது சிவனுடைய அருள் என்று நினைத்து அந்த குழந்தையை எடுத்து வளர்த்து வருகிறார் ஆனால் அந்தக் குழந்தை எட்டு வருடத்தில் இறந்துவிடுமே என்று வருத்தப்படுகிறார். சிலாதன முனிவரின் வருத்தத்தை உணர்ந்த அந்தக் குழந்தை, தந்தையே வருத்தப்பட வேண்டாம் நான் சிவபெருமானைப் பூசித்து, தவம் செய்து வரம் பெறுவேன் எனக் கூறிவிட்டு ஈசனை நினைத்து கடுமையான தவத்தில் அந்த 8 வயதுக் குழந்தை ஈடுபடுகிறது. ஈசன் அந்த எட்டு வயது குழந்தைக்கு தரிசனம் கொடுத்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு நான் எப்பொழுதும் எம்பெருமானாக ஈசனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் மேலும் தங்களிடம் உள்ள அனைத்து சக்திகளும் எனக்கும் வேண்டும் என ஈசனிடம் கேட்கிறார். ஈசன் அனைத்து சக்திகளையும் தர முடியாது ஆனால் என்னிடம் வருபவர்கள், பூசிப்பவர்கள், தவம் செய்வார்கள் என அனைவரும் முதலில் உன்னை பார்த்து உன்னுடைய அனுமதி பெற்ற பிறகு என்னிடம் வந்தால் அவர்களுக்கு அருள் புரிவேன் என்ற வரத்தை கொடுக்கிறேன் என்கிறார். மேலும் நான் இருக்கும் இடங்களில் எல்லாம் நீ என் முன்னே இருப்பாய் எனவும் நீ காளை ரூபத்தில் அமர்ந்திருப்பாய் என வரமளிக்கிறார். பின்னர் அந்த குழந்தை நந்தி என்ற பெயரிலும் நந்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
நந்தி என்றால் ஆனந்தம்,
பேரானந்தம், அருள் வளர்தல், அன்பு வளர்தல், நம்பிக்கை வளர்தல், என்ற பல பொருள்கள் உள்ளது. அதனால் அவரை நந்தீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.
சிவனை மகிழ்விக்க நந்தீஸ்வரர் மத்தளம் இசைக்கிறார் அதனால் அவள் முன்னே ஈஸ்வரன் நடனம் ஆடுகிறார். அதைக் கண்டு களிக்க பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து தேவர்களும் வந்து பார்க்கிறார்கள். ஆனால் நந்தீஸ்வரர் சிவனுடைய ஆட்டத்திற்கு ஏற்ப அவரும் முன்னே பின்னே நகர்ந்து மத்தளம் வாசிப்பதால் யாருக்கும் சிவனுடைய தரிசனம் கிடைக்கவில்லை. அதனால் இந்த நந்தி நம் முன்னே நின்று மறைக்கிறாரே என்பதைத்தான் மனிதர்கள் செய்யும் எந்த செயல்பாடுகளிலும் தடை ஏற்பட்டால் நந்தி மாதிரி என் முன்னே வந்து மறைக்கிறாய் என்ற வழக்குச் சொல் பின்னர் உருவானது. மேலும் எந்த சிவாலயங்களுக்குச் சென்றாலும் முதலில் நந்தீஸ்வரரை வணங்கி அவரிடம் அனுமதி பெற்று அருள் பெற்று பின்னர் ஈசனை தரிசனம் செய்ய வேண்டும் என்பது தற்போதும் வழக்கத்தில் உள்ளது. மேலும் அந்த தேவ ரிஷிகள் சிவனுடைய ஆட்டத்தை காண முடியாமல் நந்தியின் கொம்பு இடையில் மட்டும் சிவனை சிறிது தரிசனம் செய்ய இடம் கிடைக்கிறது. அதனால் தான் சிவன் கோயிலில் நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு நடுவே முதலில் சிவனை தரிசித்து விட்டு பின்னர் கோயிலுக்குள் செல்கிறார்கள். இதைக் கடைபிடித்து வருகின்றோம். இப்படிப்பட்ட சக்தி கொண்ட நந்தி எனப்படும் நதீஸ்வரர் மகா குருவாக நினைத்து எல்லா முனிவர்களும் முதலில் வணங்குகிறார்கள். அதில் முதல் எட்டு முனிவர்கள் நந்தீஸ்வரரை குருவாக வணங்கி ஈசனின் அருள் பெறுகிறார்கள். அவர்களின் மூத்த சிவ ஞானியாக கருதப்படுபவர் அகத்தியர்,வியாக்ரமர், பரஞ்சோதி, திருமூலர் இவர்களுக்கு பின் சனகர், சனந்தர், சனாதனர், சனந்தகுமார், என்ற நாலு முனிவர்களும் மொத்தம் எட்டு பேர் உலகில் உள்ள அனைத்து முனிவர்களுக்கும் குருவாக உள்ளார்கள். இனிவரும் பாடல்களில் நந்தி என்று பல சொற்கள் வரும் அந்த நந்தீஸ்வரர் இவரே ஆவார்.
அ)நந்தி அருளாலே நாதனாம் பெயர்:- நந்தி திருமூலரின் குருவாக உள்ளார் எனவே முதலில் குரு மூலமாகத்தான் எந்த ஒரு ஞானத்தையும் அருளையும் பெற முடியும் அதற்குப் பிறகுதான் ஈசனின் தரிசனம் இறைவனின் தரிசனம் கிடைக்கும் என்பதால் குருவை முதலில் வணங்க வேண்டும்.
ஆ)நந்தி யருளாலே மூலனை நாடினே; நந்தி எனப்படும் நந்தீஸ்வரர் அருளாலே நான் மூலனாக மாறினேன். அதனால் கருவில் மூலத்தைப் போல இந்த உலக மக்கள் வாழ்வதற்கான மூலகாரணங்களை திருமந்திரம் மூலம் எழுதியதால் என்னை மூலர் என்று பெயரிட்டார் இது என்னுடைய குருவின் அருளால் ஆகும் என்கிறார். பிற்காலத்தில் மூலர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்று ஒரு கதையை மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதாக. தான் இருக்க வேண்டும்
இ)நந்தி யருளாலே தென்செயு நாட்டினி:- நந்தியின் வரலாறு நந்தி தேவரின் அருளாலே நான் வடநாட்டிலிருந்து தென்னாடு சென்றேன். பூமியில் மக்கள் படும் கஷ்டங்களைக் கண்டு ஒரு மனிதனாக அவதரித்து மக்களின் நன்மைகளை உணர்ந்து தீமைகளை என் துன்பங்களையும் களைய வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது தான் இந்த திருமந்திரம் என்கிறார்.
ஈ)நந்தி வழிகாட்ட நானிருந்தேனே:- திருமூலராகிய நான் எனது குரு தேவனான நந்தி வழிகாட்ட நான் இந்த திருமந்திரத்தை எழுத மூல காரணமாகியவராக உள்ளார் என்பதால் தானே அவருடன் இருந்தேனே என்கிறார்.
திருமூலர் எழுதிய மந்திரம் என்னும் திருமந்திரம் மனிதர்களுக்கு தேவையான அனைத்து வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் வழிபாட்டு முறைகளையும்
அனைத்தையும் இந்த நூலில் மிகவும் அழகாக பாடியுள்ளார்.
வருடத்திற்கு ஒரே ஒரு பாடல் என்று 3000 பாடல்கள் எழுதி 3000 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, தவமிருந்து 8000 பாடல்கள் பல தலைப்புகளில் எழுதியுள்ளார்....
இந்த திருமந்திரம் என்னும் புத்தகத்தை பற்றி அறிந்து கொள்வதற்கும இறைவனுடைய அருள் வேண்டும்.
நந்தீஸ்வரர் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
2. நந்தியின் வேலை இவர் அனுமதி பெறாமல் ஈசன் உள்ள இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
3. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
4. நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.
5. சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட அதிகார நந்தி வாகனம் உள்ளது. இந்த அதிகார நந்தியை தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார்.
6. ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.
7 தமிழ்நாடு மக்களுக்கு நந்நி என்றதும் தஞ்சை பெரிய கோவில் நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.
8. மதுரை ஆவணி மூல வீதியில் "மாக்காளை'' எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடை மருதூர் ஆலயங்களிலும் காணலாம்.
9. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
10. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்து இருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை "நந்திமுக தரிசனம்'' என்கிறார்கள்.
11. மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி கண்கவர் அழகான நந்தியாகும். இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
12. கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு 4 மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.
13. மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள நந்திக்கு கருவறை நந்தி என்று பெயர்.
14. திருவாரூர் தியாகராஜர் கோவில் சன்னதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி உள்ளது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.
15. திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
16. சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.
17. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது. ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.
18. நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.
19. இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம்.
20. சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.
21. தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது. இங்கு சிவன் நாட்டியாசாரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர்.
22. காஞ்சிபுரத்தில் இராஜ சிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது. அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார். அவர் அருகில் நந்திகேசுவரர் ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார்.
23. தமிழ்நாட்டில் நந்திகேசுவரரின் மதம் கி.பி. 700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது.
24. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம். திருவாரூர்,
திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.
25. பஞ்சமுக வாத்தியலடீசணம் என்னும் சுவடியில் குடமுழா வாத்தியம் நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.
26. காமசாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றன. நந்தி இயற்றிய பல செய்யுட்களை ''ரதி ரகசியம்'' என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.
27. ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே. சைவமரபில் தலையாயது ''சிவஞான போதம்'' என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில் போதித்தார்
28. சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர் ஆவார்.
29. சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம்.
30. நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார்.
31. சில சிவாலயங்களில் நந்திக்குப் பதிலாகக் குரங்கு தூவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம். எவ்வாறு சிவதத்துவத்தை நந்தி வாயிலாகப் பரமன் போதித்தாரோ அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது.
32. தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும்.
33. முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு.
34. `நந்தி' என்ற வார்த்தையுடன் `ஆ' சேரும்போது `ஆநந்தி' என்ற பொருள் தருகிறது. `நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு!' என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது.
35. நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.
36. ஆலயங்களைக் காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பது தெளிவாகிறது. இதன் அடையாளமாகத் தான் திருக்கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.
37. நந்தி தேவருக்கு சிவ பெருமானைப் போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு. மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது. மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர்.
38. நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன்.
39. நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.
40. எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரத்தை சிவபெருமான் நந்தி தேவருக்கு வழங்கியிருக்கிறார்.
41. நந்திதேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம். ரன் என்பது ஓட்டுகிறவன். துக்கத்தை ஓட்டுகிறவன் என்பதே ருத்திரன். தூயவன், சைலாதி எனவும் நந்தியை அழைப்பர்.
42. மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், ருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமாலையன் போன்ற தேவர்களெல்லாம் நந்தியைக் குருவாகக் கொண்டு வேதம் கற்றவர்கள் ஆவர்.
43. பிரவிர்த்தி என்ற சேர்க்கையை விட்டு நிவிருத்தி என்ற விலகலைத் தேர்ந்தெடுப்பது ஞானத்தின் மார்க்கம். இதைக் கற்றுக் கொடுத்தவர் நந்திதேவரே. இவர் வழி வந்தவர்களே மெய் கண்ட சந்தானத்தின் குருபரம்பரை என்றழைக்கப்படுகிறார்கள்.
44. சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.
45. சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.
46. பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானி டம் வைக்கும் வேண்டுதல் களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.
47. நந்தியை வழிபடும்போது, `சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக' என்று பிரார்த்திக்க வேண்டும்.
48. நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.
49. பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பிரதோஷ காலத்தில் பீஜத்தை வந்தடைகின்றன. அதனால் நந்தியின் பீஜத்தைத் தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும். பிறகு வாலைத் தொட்டு வணங்க வேண்டும்.
50. நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் சிறந்து விளங்கும்...
திருமந்திரத்திற்கு இன்னொரு பெயர் தனித்தமிழ் ஆகமம் என்றும் மந்திரம் என்பதற்கு நினைப்பவரை காப்பது நினைப்பவரை காக்க வல்லது என்றும் ஆகமம் என்றால் ஆகி நின்று அண்ணிப்பான் தாழ் வாழ்க என்றதால் திருமந்திரம் சிவ சொரூபம் ஆகும் திருமந்திரம் தாய் எனவும் ஏனைய திருமுறைகள் அதன் சேய் எனவும் கூறுவர் திருமந்திரத்தை பொருள்நூல் எனவும் கூறுவர் இதன் பெருமை அளவிட முடியாது
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி....
நமசிவாயம் வாழ்க
நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கதான் தாள் வாழ்க.......
அவனன்றி அணுகும் அசையாது......
எல்லாம் அவன் செயல்...
சாதாரண மனிதனாக பிறந்து இவ்வுலக வாழ்க்கையில் உள்ள இன்ப துன்பங்களை அனுபவித்து பின்னர் இறைவனின் சக்தியை உணர்ந்து அந்த இறை சக்தியை தனக்குள் வரவழைக்க அதற்க்குரிய மந்திரங்களை ஓதி பல நாட்கள் மாதங்கள் வருடங்கள்எனத் தவமிருந்து ஒரு மனிதன் சித்தனாகவும் புத்தனாகவும் ஞானியாகவும் மாறுகிறான்..
சாதாரண மனிதர்களாகிய நாம் மேற்கூறியபடி சித்தர் ஆகாவிட்டாலும் ஆறறிவு படைத்த மனிதனாக பிறந்ததற்கு ஈசனுடைய அருளையாவது பெற வேண்டும்.
தெய்வத்தமிழ் தூதர் இறைவனின் தூதர் என்று அழைக்கப்படும் மூலர்
திருமூலர் எழுதிய திருமந்திரம் பாடலுக்கான விளக்கங்கள் அளிக்கப்படும்.
இறைவனை மூலவர் என்று அழைக்கிறோம்.
வேறு எந்த மனிதரையும் மூலர் என்று அழைப்பதில்லை ஆனால் திருமந்திரம் எழுதிய மூலரை திருமூலரை படைத்தது ஈசன் தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது....
இவ்வுலகில் உள்ள நூல்களுக்கெல்லாம் மூலநூல் திருமூலர் எழுதிய திருமந்திரம் ஆகும்...
சித்தர்களுக்கெல்லாம் சித்தர் ஆவார். ஈசனின் அருளைப் பெற்று பல வருடங்கள் கடும் தவம் செய்து ஈசனினிடம் நேரடியாக. தீட்சை பெற்றவர் மூலர் எனும் திருமூலர் ஆவார்.
இதை ஆராய்ந்து ஒரு நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
திருமூலரும் திருவள்ளுவரும் கடவுள் வாழ்த்து சிறப்பாய்வு
இந்தப் புத்தகத்தில் திருமூலரின் வரலாறு திருவள்ளுவரின் வரலாறு இணைக்கப்பட்டுள்ளது.
நூலாசிரியர் எம் எஸ் கே மனோகரன் கோவை
No comments:
Post a Comment