Thursday, 12 June 2025

திருமந்திரம் 451
இரண்டாம் தந்திரம் அத்தியாயம் 14
கரு உருவாதல்.

ஆக்குகின்றான் முன்பிரிந்த  இருபத்தஞ்சு
ஆக்குகின்றான் வனாதி எம் ஆருயிர்
ஆக்குகின்றான் கர்ப்ப கோளகை யுள்ளிருந்து
ஆக்குகின்றான் அவன் ஆவதறிந்தே

விளக்கம்:- திருமூலரின் திருமந்திரத்தில் ஒரு பெண்ணினுடைய வயிற்றில்  கரு எப்படி உருவாகிறது அல்லது எந்த மாதிரி குழந்தையை கருமூலம் உருவாக்க முடியும் என்பதைப் பற்றி 40 பாடல்கள் மூலம் விளக்குகிறார். ஆண்குழந்தை, பெண் குழந்தை, புத்திசாலியான குழந்தை இரட்டைக் குழந்தைகள் பெறவும், அல்லது திருநங்கை, மாற்றுத் திறனாளி குழந்தைகள்  பிறக்கக் காரணம் என்னவென்று விரிவாகப் பாடியுள்ளார். இப்படியாக திருமூலர்  ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பதற்கான வழிகளைக் கூறுகிறார். உடலிலுள்ள 96 தத்துவங்களில் தனஞ்செய் வாயு மட்டும் மனிதன்  இறந்த பிறகு உடலிலிருந்து 72 மணிநேரம் கழித்துத்தான் தலைப்பின் கபாலத்தை பிளந்து தனஞ்செய் வாயுவானது வெளியே போகும். பிறகுதான் உடல் ஆழுக/ கெட்டுப் போக ஆரம்பிக்கும்.

அ).ஆக்குகின்றான் முன்பிரிந்த  இருபத்தஞ்சு:-
ஈசன் இந்த மனித உயிரை ஆக்குகின்றான் அல்லது படைக்கின்றான். மனிதன் முற்பிறவியில் வாழ்ந்த பொழுது அவனுடைய உயிர் உடலிலிருந்து  பிரிந்த பொழுது 96 தத்துவங்களும் அழிந்து விடும். மேலும் கீழ்க்கண்ட 25 தத்துவங்களைக் கொண்டு  ஒரு உயிரை உருவாக்க அடிப்படை காரணமாக உள்ளது எனத் தெரியவருகிறது. அந்த உயிரை அல்லது ஆத்மாவை   மீண்டும் உருவாக்குகிறான். அதுதான் கருவுருவாதல் ஆகும்.

இறைவன் இந்த கருவை உருவாக்கும் பொழுது ஒரு உயிருக்குத் தேவையான 96 தத்துவங்களை கொண்டு ஒரு உயிரை உருவாக்குகிறார்.  அதில் இந்த 25 தத்துவங்கள் அடிப்படையாக உள்ளது. அவை என்னவென்றால்
பூதம் 5,+ புலன் 5,+ ஞானேந்திரியம் 5,+ கன்மேந்திரியாம் 4, +
காரணம் 4, +புருடன் 1+ உயிர் 1ஆக மொத்தம் 25 ஆகும்.

ஒரு பெண்ணின் வயிற்றில்  கருவாக உயிர் பெற  மேற்கண்ட 25 தந்திரங்களும் இறைவனால் உருவாக்கப்படுகிறது. அவை என்ன என்று பார்ப்போம்.

அ) பூதம் 5 அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது. நீர்,நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் அண்டத்தில்/பிரபஞ்சத்தில் உள்ளது. ஒரு மனிதனின் உடலில் அல்லது பிண்டத்தில் நிலமாக உடலும், அந்த உடலில் நீர் அல்லது ரத்தம் உள்ளது, அந்த உடல் எப்பொழுதும் கதகதவென்று ஒரு வெப்பத்தை கொடுத்துக் கொண்டுள்ளது அது நெருப்பு ஆகும். சுவாசக் காற்று மூலம் பிராணவாயுவை எடுத்துக் கொள்கிறது. இவை அனைத்தும் ஆகாயம் எனப்படும் பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
மனிதனைப் பொறுத்தவரை இரண்டு வகையான செயல்பாடுகள் மிகவும் முக்கியமானவையாகும்.

ஆ)புலன் 5.  மெய்யுறுப்புகளாகிய உடல்,
கண், காது, மூக்கு, வாய் இந்த ஐம்புலன்கள் மூலம் பார்த்தல்,  உணர்தல், சுவைத்தல், செவி மூலம் கேட்டல் போன்ற செயல்கள் ஆகும்.
இரண்டாவது அவைகள் மூலம் அவன் செயல்படுதல்.

இ)இந்திரியங்கள் என்றால் சக்தி அல்லது திறன் என்று பெயர். அந்த சக்திக்கு பெயர்தான் இந்திரியம். அதனால் தான் அர்த்தநாரீஸ்வரர் என்ற தத்துவத்தில் உடலில் பாதி சிவனாகவும் பாதி சக்தியாகவும் உள்ளார் எனத் தெரிய வருகிறது.  அதாவது நேர்மறை எண்ணங்கள் கொண்ட செயல்பாடு ஆகும்.

ஈ)ஞானேந்திரியம் என்றால் ஞானத்தின் மூலம் கிடைக்கும் ஞானசக்தி ஆகும். அது மனிதனின் வெளியுலக வாழ்க்கையில் பல விடயங்களை கற்றுணர்ந்து, தேர்ந்து அறிவு பெறுவதற்காண வழிமுறைகள் ஆகும். அதாவது ஞானம் பெறுவதற்கு இறைவன் நமக்கு ஐந்து மெய்யுருப்புகளை/ பொறிகளை கொடுத்துள்ளான். இந்த உறுப்புகள் இருந்தால் மட்டும் போதாது அதன் பணியை சரியாகச் செய்யும் சக்தி/ திறனையும் (இந்திரியம்) உடையதாக இருக்கவேண்டும். எனவே இந்த ஐந்து செயல்களும் சரியாகச் செயல்படச் செய்யும் உறுப்புக்களுக்கு ஞானேந்திரியம் என்று பெயர்.

உ)கர்மேந்திரியம். நமது புறச்செயல்களுக்கு, நாம் செய்யும் காரியங்களுக்கும், கர்மாவிற்கும் பயன்படும் உறுப்புகள் கை, கால், வாய், கருவாய், எருவாய் என ஐந்தாகும். இவை ஐந்தும் இருந்தால் மட்டும் போதாது அவைகள் செயல்படும் திறனையும் பெற்றிருக்க வேண்டும். அந்த செயல் திறனுக்கு காரணமான இந்த ஐந்து உறுப்புகள் மூலம் செய்யப்படும் காரியங்களுக்கு கர்மேந்திரியம் ஆகும்.

ஊ)புருடன் என்றால் பரமாத்மா, பேருயிர், சிவான்மா ஆகும். இறைவன் அந்த உயிரில் குடி புகுந்து வாழ்கிறான். அதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றார்கள்.

எ)காரணம் 4. இந்த பிரபஞ்சத்திற்கான மூலப்பொருள்பஞ்சபூதங்கள் . இந்த மூலப்பொருள்களின் அடிப்படையில்தான் இந்த உலகத்திற்கும் அதில் நடைபெறும் நிகழ்வுகள் ஆக்கல், அழித்தல், காத்தல்  அனைத்திற்கும் அடிப்படையாக உள்ளது.

ஏ) உயிர்:- மேற்கண்ட 25 தத்துவங்களை உள்ளடக்கியதுதான் ஒரு உயிர் ஆகும்.

ஆ)ஆக்குகின்றான் வனாதி எம் ஆருயிர் :-  வனாதி என்றால் வானளாவிய ஆதி முதல் அந்தம்வரை உள்ள இறைவன் இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிர்களை படைக்கின்றான்.
எம் ஆருயிர் என்றால் அரிதான இந்த உயிர் கருவில் உருவாகக் காரணமாக ஈசன் இருப்பதால் அதை எம் உயிர் என்கிறார்.  அதனால்  தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றார்கள். ஆறறிவைக் கொண்ட உணர்வுகளை அந்தக் கருவுக்குள் அறு மூலாதாரங்களையும் ஆக்குகின்றார்.

இ)ஆக்குகின்றான் கர்ப்ப கோளகை யுள்ளிருந்து:-  கோளகை என்றால் உருண்டையான, அண்டம், கோள் எனப் பொருள்படும். அந்தக் கோளகைக்குள் ஒரு உயிரை/கருவை ஆண் பெண் இனச் சேர்க்கை மூலம் ஒரு பிண்டத்தை ஒரு பெண்ணின் வயிற்றில்  உருவாக்குகிறார்.
மேலும் அந்த குழந்தை இந்த பிரபஞ்சத்தில் வந்து பிறக்கும் பொழுது அப்பொழுது  கோள்களின் சுழற்சியின்
தன்மையைப் பொறுத்து அந்த குழந்தையின் வாழ்க்கை பயணம் தொடர்கிறது எனத் தெரிய வருகிறது.

ஈ)ஆக்குகின்றான் அவன் ஆவதறிந்தே;- ஒரு குழந்தையை ஈசன் உருவாக்குகின்றான். அந்தக் குழந்தை என்னவாக ஆக வேண்டும், என்ன செய்ய வேண்டும், இந்த உலகத்திற்கு  இந்தப் பிறவியின் பயன் உள்ளதா இல்லையா என்பதை இறைவன் முன்பே தீர்மானித்து அந்த கருவுக்குள் புகுந்து அந்த பிண்டத்தை ஆக்குகின்றான். அப்படி இந்த உலகில் தோன்றியவர்கள் தான் மகா சித்தர்கள் அவர்கள் இறைவனின் தூதர்களாக  இந்த உலக மக்களுக்காக  நன்மைகள் பல செய்து அல்லது அதை எழுத்து மூலமாக உருவாக்கி உள்ளனர். மேலும் தீமைகளையும் அழித்து நல்வழிகாட்டுதலாக இருந்து அவர்களால் எழுதப்பட்ட அந்த இலக்கியங்கள், பல காப்பியங்கள் உள்ளன. அவைகளே  அகத்தியம், திருமந்திரம், திருக்குறள், திருவாசகம்,தேவாரம் போன்ற அனைத்து படைப்புகளும் இறைவனால் மனிதன் மூலம் படைக்கப்பட்டவையே ஆகும் அதை ஒரு பெண்ணின் கருவிலேயே முன்பே தீர்மானித்து வள்ளலார் போன்ற தெய்வக் குழந்தைகளை உருவாக்கி இந்த உலகம் மக்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் விட்டுச் சென்ற வழிநடத்தல் இந்த நூல்களின் மூலம் ஆறறிவு படைத்த மனிதர்கள் அதை உணர்ந்து தெளிந்து படித்து அதன் மூலம் இறைவனை அடைய வழிகாட்டுதலாகும்.

அத்தகைய சக்தியாக, ஞானக் குழந்தைகளை பெற்றிறெடுக்கக் கூடிய திறனை இறைவன் மனிதர்களுக்குள் அதாவது ஆண் பெண் இருவருக்குள் வைத்துப் படைத்துள்ளான்.  அவர்களுடைய பால் உணர்வுகள் மூலம் பிறப்பது தான் இந்த கருவில் உருவாக்கப்படும் ஞானக் குழந்தைகள் ஆவார்கள்.

எனவே இந்த தத்துவத்தை எளிதில் சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ள இயலாது. காரணம் நாம் இளமை பருவத்தில் வாழுகின்ற வாழ்க்கையில் இத்தகைய தத்துவங்களை எடுத்துக் கூற அல்லது படித்துப் பார்க்க அல்லது நமது எண்ணங்களுக்குள் வர ஏதாவது ஒரு ஞான சக்தி வேண்டும். அவர்கள்தான் இத்தகைய நூல்களைப் படித்து புரிந்து தெளிந்து இந்த மாதிரியான குழந்தைகளை நாமும் பெற்றெடுக்க முடியும் என்று யார் உணர்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்த கரு உருவாதல் என்னும் அதிகாரத்தில் எழுதியுள்ள பாடல்கள் தத்துவங்களை உணர்ந்து கொள்ள முடியும்.
இனிவரும் காலங்களிலாவது இந்த உலகம் உலகத்தில் உள்ள மக்கள் அழியாமல் இருக்கவும் அவர்களை வழிநடத்தவும் ஒரு ஞானக் குழந்தை வேண்டும். எத்தனையோ மனிதர்கள் பிறந்தாலும் இறந்தாலும் அவர்கள் எல்லாம் ஞானக்குழந்தையாக முடியாது. கோடான கோடியில் ஒருவன் தான் இறைவனால் அந்தக் கருவில் உருவாக்கி அந்த ஞானக் குழந்தையை உலகிற்கு அளிக்கிறான். அதற்கு உதாரணமாக இந்த உலகத்தில் வாழ்ந்து இறைவனை உணர்ந்து மோட்சம் அடைந்த பல ஞானிகளை நம்மால் கூற முடியும் நமக்கு மிக மிக நெருங்கிய தொடர்புடைய காலத்தில் 1823-1874 வரை இந்த உலகில் வாழ்ந்து மறைந்தவர் அருட்பிரகாச வள்ளலார் ஆவார். இதைவிட ஒரு சிறந்த உதாரணம் வேறு இல்லை. எனவே மானிடர்களே உங்களுக்கு எத்தன்மை வாய்ந்த, திறனுடைய, அறிவுடைய, ஞானமுடைய குழந்தையை பெற வேண்டும் என்ற  தத்துவத்தை பின்வரும் 40  பாடல்களில் விளக்குகிறார். இதை பின்பற்றி முயற்சி செய்து அத்தகைய ஞானக் குழந்தையை பெறுவதற்கு இறைவனுடைய அருளை முதலில் பெற வேண்டும்.

இந்த அடிப்படை தத்துவத்தை உணர்ந்து ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து இன்பத்தை அனுபவிக்கும் பொழுது அடிப்படை விடயங்களை புரிந்து கொண்டு அவர்களது மணவாழ்க்கையில் ஈடுபட்டால் அவர்கள் நினைத்த போன்ற ஒரு குழந்தையை உருவாக்க முடியும் என்ற தத்துவத்தை இந்த பாடல்கள் மூலம் விளக்குகிறார்.

எம்எஸ்கே மனோகரன்
திருக்குறள் திருமந்திரம் ஆய்வாளர். கோவை 

No comments:

Post a Comment